முடவாட்டுக்கால் கிழங்கு உணவாக பயன்படுதும் முறை - guru yogaram babuji

                

முடவாட்டுக்கால் கிழங்கு 

உணவாக பயன்படுதும் முறை


1)    இந்த கிழங்கை ஆட்டுக்காலை சூப் வைப்பது போல பொடிப் பொடியாக நறுக்கியோ அல்லது மற்ற மசாலா பொருட்களுடன் சேர்த்து அரைத்தும் சூப்பாக எடுத்துக் கொள்வார்கள்

2)    சில குறிப்பிட்ட பருவங்களில் மட்டுமே இந்த கிழங்கு கிடைக்கும் என்பதால் மற்ற சமயங்களில் அதன் தோல் சுருங்கி உள்ளிருக்கும் கிழங்கும் சுருங்கிவிடும். அதில் உள்ள நீர்ச்சத்து போய்விடும் என்பதால் இதை பதப்படுத்துவதற்கு மணல்களில் புதைத்து வைப்பார்கள்.

3) இப்போது அதன் தோலை சீவி விட்டு காய வைத்து பொடி செய்து    வருட கணக்கு பதப்படுத்திப் பயன்படுத்திக்கொள்ள முடியும்.


தேவையான பொருள்கள்

1)    முடவாட்டுக்கால் கிழங்கு - சிறு துண்டு (50-100 கிராம்)

2)    சின்ன வெங்காயம் - 10

3)    பூண்டு - 10 பற்கள்

4)    கருவேப்பிலை - சிறிதளவு

5)    தக்காளி - ஒன்று

6)    சீரகம் - ஒரு ஸ்பூன்

7)    மிளகு - ஒரு ஸ்பூன்

8)    பட்டை - ஒரு துண்டு

9)    கிராம்பு - 2

10)   கொத்தமல்லி இலை - சிறிதளவு,

11)   மஞ்சள் பொடி - கால் ஸ்பூன்

12)   எண்ணெய் - ஒரு ஸ்பூன்

13)   இஞ்சி - ஒரு இன்ச் அளவு

14)   பெருங்காயம் – சிறிது.


செய்முறை

1)    முடவாட்டுக் காலை தோல் சீவி சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
2)    இஞ்சியை தோல் சீவி பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
3)    ஒரு மிக்ஸி ஜாரில் இஞ்சி, பூண்டு, சீரகம், மிளகு, சின்ன வெங்காயம், கருவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து அதோடு எடுத்து வைத்திருக்கும் தக்காளியையும் பொடியாக நறுக்கி சேர்த்துக் கொள்ளவும்.
4)    இதை நன்கு மைய அரைத்துக் கொள்ள வேண்டும்.
5)    ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் ஒரு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்ததும் பட்டை, கிராம்பு சேர்த்து பொரிய விடவும்.
6)    பின்பு அடுப்பை மிதமான தீயில் வைத்துக் கொண்டு அரைத்த விழுதை அதில் சேர்த்து தேவையான அளவு தண்ணீரும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
7)    மேலே சொன்ன அளவிற்கு ஒரு லிட்டர் வரையில் தண்ணீர் சேர்க்கலாம். இதில் மஞ்சள் தூள், பெருங்காயம் தூள் சேர்த்து நன்கு கொதிக்க விடுங்கள்.
8)    நன்கு கொதித்து வந்ததும் உப்பு சேர்க்க வேண்டும். சூப்பிற்கு எப்போதும் கடைசியில் தான் உப்பு சேர்க்க வேண்டும். முதலில் சேர்த்தால் அதிகமாகிவிடும்..
9)    சுத்தம் செய்து நறுக்கி வைத்திருக்கும் கொத்தமல்லி இலையை தூவி இறக்கினால் ஆட்டுக்கால் சூப் இன் சுவையில் அருமையான சைவ ஆட்டுக்கால் சூப் தயார்.

வேறு வகை சூப்:

 இஞ்சி, பூண்டு, சிறிது தேங்காய் சேர்த்து பேஸ்ட்போல அரைத்து கொள்ள வேண்டும். ஒரு வாணலில் எண்ணெய், லவங்கப்பட்டை, சாம்பார் வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்க வேண்டும். பிறகு, சுத்தம் செய்து வைக்கப்பட்ட முடவாட்டுக்காலையும், அரைத்து வைத்துள்ள விழுதையும் கொட்டி, ஒரு லிட்டர் தண்ணீர் ஊற்றி கொதிக்கவிட வேண்டும்.. நன்றாக கொதித்தபிறகு, கடைசியாக பூண்டு, உப்புத்தூள், மிளகு தூள் சேர்த்து இறக்கினால் சூப் ரெடி.

கிழங்கு சாறு:

இந்த முடவாட்டுக்கால் கிழங்கில் சாறு போல தயாரித்து குடிக்கலாம்.. அதாவது, மிளகு, சீரகம், பூண்டு, இஞ்சி, கொத்தமல்லி, கறிவேப்பிலை, சின்ன வெங்காயம், என அனைத்தையும் வதக்கி கொள்ள வேண்டும். பிறகு அதிலேயே சுத்தம் செய்து பொடிபொடியாக நறுக்கப்பட்ட கிழங்கையும் போட்டு வதக்க வேண்டும்.. பிறகு, சோம்பு, பட்டை, சேர்த்து, வதக்கிய பொருட்கள் அனைத்தையும் ஆறவைத்து மொத்தமாக அரைத்து கொள்ள வேண்டும். எவ்வளவு தண்ணீர் வேண்டுமோ, அவ்வளவு ஊற்றி இந்த விழுதை கொதிக்க வைத்து இறக்கி, சுடுசோறில் பிசைந்து சாப்பிட வேண்டும்.                                                

                                                                                    



Comments

Popular posts from this blog

முடவாட்டுக்கால் கிழங்கு (Arrowroot) ஒரு இயற்கை அன்பளிப்பு

தினந்தோறும் பலரின் பசியை போக்கிடும் அன்னதான சேவை The alms service that satiates the hunger of many